Regional03

ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாளை மறு தினம் - தி.மலை மாவட்டத்தில் 77 மையங்களில் வாக்குப்பதிவு : 31,555 பேர் வாக்களிக்க உள்ளனர்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 35 உள்ளாட்சி பதவிகளுக்கு, 77 மையங்களில் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் 31,555 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தி.மலை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 3 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி, 11 ஊராட்சி மன்ற தலைவர் பதவி மற்றும் 52 வார்டு உறுப்பினர் பதவி என 66 பதவிகளுக்கு வரும் அக்டோபர் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

3 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு திமுக, அதிமுக வேட்பாளர்கள் உட்பட 21 பேரும், 11 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 36 பேரும், 52 வார்டு உறுப்பினர் பதவிக்கு 117 பேரும் என மொத்தம் 174 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில் 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 170 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

போட்டியின்றி 31 பேர் தேர்வு

87 பேர் தேர்தலில் போட்டி

இதற்கான வாக்குப்பதிவு வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. 31,555 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 77 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 400-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

வாக்குச்சாவடிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச் சீட்டுகள் மற்றும் தளவாட பொருட்கள் அனைத்தும் நாளை (8-ம் தேதி) கொண்டு செல்லப்பட உள்ளன. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், முகவர்கள் முன்னிலை யில் வாக்குப்பெட்டிகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு கொண்டு செல்லப் படும். வாக்கு எண்ணிக்கை வரும் 12-ம் தேதியன்று 15 மையங்களில் நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT