மேட்டூர் அணை நீர்மட்டம் 75.04 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் 12-ம் தேதியில் இருந்தும் கால்வாய் பாசனத்துக்கு ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்தும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. மேலும், பாசன நீர்தேவையை பொறுத்து தண்ணீர் கூடுதலாகவும், குறைவாகவும் திறக்கப்படுகிறது.
அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 350 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், நேற்று காலை முதல் 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக தொடர்கிறது.
இதனிடையில், நேற்று முன்தினம் விநாடிக்கு 13 ஆயிரத்து 315 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 12 ஆயிரத்து 308 கனஅடியானது. நீர் திறப்பை விட நீர்வரத்து அதிகம் இருப்பதால், அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 74.42 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 75.04 அடியானது. நீர் இருப்பு 37.19 டிஎம்சி-யாக உள்ளது.