மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து 73.86 அடியானது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்டுஉள்ள நீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 10 ஆயிரத்து 440 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 14 ஆயிரத்து 192 கனஅடியாக அதிகரித்தது. டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழை காரணமாக நீர் திறப்பு குறைவாக இருக்கும் நிலையில், அணை நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 72.86 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து நேற்று 73.86 அடியானது. நீர் இருப்பு 35.94 டிஎம்சி-யாக உள்ளது. டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று முன்தினம்14 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்நிலையில், நேற்று 16 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.