கோவை: மூன்றாம் பாலினத்தினருக்கு மறுவாழ்வு அளிக்க ‘சிகரம் தொடு’ திட்டத்தை செயல்படுத்த மாவட்ட காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
கோவையில் மூன்றாம் பாலினத்தினர் சிலர் போக்குவரத்து சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் ரயில் பயணிகள், வியாபாரிகளிடம் பணம் கேட்பதாக காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதையடுத்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்த மாவட்ட காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் கூறும்போது, ‘‘மூன்றாம் பாலினத்தினருக்கு மறுவாழ்வு அளிக்க ‘சிகரம் தொடு’ என்ற சிறப்புத் திட்டம் செயல்படுத்தபட உள்ளது. வீடு இல்லாத திருநங்கைகள் தங்குவதற்கு விடுதிகள் ஏற்பாடு செய்யப்படும். திருநங்கைகளில் பலர் கல்வியறிவு பெற்றுள்ளனர். முதலாவதாக பட்டப்படிப்பு முடித்தவர்கள், இரண்டாவதாக தொழிற்கல்வியில் ஈடுபாடு உள்ளவர்கள், மூன்றாவதாக வீட்டுவேலை, சமையல் ஆர்வம் உள்ளவர்கள் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். முதல்கட்ட ஆய்வில் மூன்றாம் பாலினத்தினர் 40 பேரை அடையாளம் கண்டறிந்துள்ளோம். மாவட்ட காவல்துறையினர் மட்டுமின்றி, பல்வேறு அரசுத்துறையினர் இணைந்து இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மாவட்ட ஆட்சியருடன் கலந்தாலோசித்து வேலைவாய்ப்பு முகாம், தங்கும் இடம் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தித் தரப்படும்” என்றார்.