ஓசூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தகொண்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நான்காம் கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி மற்றும் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். 
Regional02

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை - 11.97 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் : தருமபுரி மாவட்டத்தில் 7.93 லட்சம் பேருக்கு தடுப்பூசி

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 11 லட்சத்து 97 ஆயிரத்து 832 பேர் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஓசூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தகொண்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் தளி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பேளகொண்டப்பள்ளி துணை சுகாதாரநிலையம் ஆகியவற்றில் நடைபெற்ற நான்காம் கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தும்முகாமை ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி மற்றும் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்..ஆய்வின்போது, ஆட்சியர் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 9 லட்சத்து33 ஆயிரத்து 612 பேருக்கும், இரண்டாம் தவணை 2 லட்சத்து 64 ஆயிரத்து 220 பேருக்கும் என மொத்தம் 11 லட்சத்து 97ஆயிரத்து 832 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை கரோனா தடுப்பூசி போடாதவர்கள், இரண்டாவது தவணை போட வேண்டியவர்கள் பயனடையும் வகையில் இன்று (நேற்று) கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ந்து 10 ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டு பகுதிகளிலும், ஊராட்சி மற்றும் கிராம பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களிலும், அரசு ஆரம்ப சுகாதார மையம், அரசு மருத்துவமனைகளில் என 723 மையங்களில் நடைபெற்றது.

சிறப்பு முகாமில், 80,100 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோவிஷீல்டு 79,980 டோஸ், கோவேக்சின் 13,550 டோஸ் என மொத்தம் 93,530 டோஸ்கள் இருப்பில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, மாவட்ட துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) கோவிந்தன், தளி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, வட்டார மருத்துவ அலுவலர்கள் விவேக், சச்சரித்தா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல்ரவிக்குமார், ராமச்சந்திரன், பாலாஜி, வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் நேற்று 4-ம் கட்டம் தடுப்பூசி சிறப்பு முகாம் 380 மையங்களில் நடைபெற்றது. தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட நாட்டாண்மைபுரம், மதிகோன்பாளையம் மற்றும் மாட்லாம்பட்டி, முருக்கம்பட்டி, சொன்னம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த முகாம்களை ஆட்சியர் திவ்யதர்சினி ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறும்போது, “கடந்த செப்டம்பர் 24-ம் தேதி வரை தருமபுரி மாவட்டத்தில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 871 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்றைய (நேற்று) சிறப்பு முகாமில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஆய்வின்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் சவுண்டம்மாள், நகராட்சி ஆணையர் சித்ரா, வட்டாட்சியர்கள் ராஜராஜன் (தருமபுரி), சின்னா (காரிமங்கலம்), அசோக்குமார் (பாலக்கோடு), காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், கலைச்செல்வி, வட்டார மருத்துவ அலுவலர்கள் சரஸ்குமார், அனுராதா, சிவகுரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT