Regional02

நண்பரை கொலை செய்த இளைஞர் போலீஸில் சரண் :

செய்திப்பிரிவு

திருவள்ளூர் அருகே புல்லரம்பாக்கம், ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகன்(31), சுபாஷ் சந்திரபோஸ்(30). நண்பர்களான இவர்கள் இருவரும் காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர்.

இவர்கள் இரவு நேரத்தில் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம். நேற்று முன்தினம் இரவும் நண்பர்கள் இருவரும் புல்லரம்பாக்கம் பகுதியில் பூண்டி ஏரிக்கரை சுற்றுச்சுவர் மீது அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். அப்பகுதியில் சென்றோர் இருவரையும் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

ஆனாலும், மிகுந்த கோபத்தில் இருந்த சுபாஷ் சந்திரபோஸ், வீட்டில் இருந்த முருகனை சமாதானம் பேசுவது போல் தெருவுக்கு அழைத்துள்ளார். அதை நம்பி தெருவுக்கு வந்த முருகனை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுபாஷ் சந்திரபோஸ் ஓட ஓட விரட்டி தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டியுள்ளார். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, சுபாஷ் சந்திரபோஸ் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீஸார், முருகனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT