புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தியதற்காக, மத்திய கல்வி அமைச்சகத்தால், நந்தா பொறியியல் கல்லூரிக்கு வழங்கப்பட்ட ‘மென்டார்’ எனும் சிறப்பு அந்தஸ்துக்கான சான்றிதழை, ஐஐசி-யின் தலைவர் எம்.ஈஸ்வரமூர்த்தியிடம்,  நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அருகில் கல்லூரி முதல்வர் என்.ரெங்கராஜன் உள்ளார். 
Regional02

புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்திய நந்தா பொறியியல் கல்லூரிக்கு சிறப்பு அந்தஸ்து :

செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில், மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும், சிறந்த தொழில் முனைவோர்களை உருவாக்கவும் மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி புதிய கண்டுபிடிப்பு மன்றம் 2.0 (ஐஐசி 2.0) செயல்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் 4000-க்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் இந்த மன்றம் இயங்கி வருகிறது. இந்த மன்றங்களின் மூலம் சிறப்பான கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தும் கல்லூரி மன்றத்திற்கு, மத்திய அரசின் கல்வி அமைச்சகம் ‘மென்டார்’ எனப்படும் சிறப்பு அந்தஸ்தை வழங்கி வருகிறது.

இந்த அந்தஸ்தை பெறுவதற்காக, 3000-த்திற்கும் அதிகமான கல்லூரிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி நந்தா பொறியியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் புதிய கண்டுபிடிப்பு மன்றத்திற்கு ‘மென்டார்’ எனும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதுபோல கடந்த கல்வியாண்டிற்கான 5 நட்சத்திர அந்தஸ்தும் நந்தா பொறியியல் கல்லூரி பெற்றுள்ளது. நந்தா பொறியியல் கல்லூரியின் புதிய கண்டுபிடிப்பு மன்றத்திற்கு , ‘மென்டார்’ என்கிற சிறப்பு அந்தஸ்தினை பெற உறுதுணையாக செயல்புரிந்த கல்லூரியின் கண்டுபிடிப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு மையத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு,  நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி சண்முகன் மற்றும் கல்லூரியின் முதல்வர் என். ரெங்கராஜன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். இதற்கான சான்றிதழை இயந்திரவியல் துறை புறமுதல்வரும், ஐஐசி-யின் தலைவருமான எம்.ஈஸ்வரமூர்த்தியிடம்,  நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில்,  நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ். நந்தகுமார் பிரதீப். நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ். திருமூர்த்தி, முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் எஸ். ஆறுமுகம் மற்றும் நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் இயக்குநர் ஜெ. செந்தில் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்து ஊக்கப்படுத்தினர். 

SCROLL FOR NEXT