Regional02

‘புதுச்சேரி மாநிலத்தில் பாஜகவுக்கு அடிமையாக என்.ஆர்.காங்கிரஸ் அரசு' :

செய்திப்பிரிவு

காரைக்கால்: புதுச்சேரி மாநிலத்தில் பாஜகவுக்கு அடிமையாக என்.ஆர்.காங்கிரஸ் அரசு உள்ளது என எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேச உள்ளாட்சித் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர்களுள் ஒருவரான கரூர் தொகுதி எம்.பி ஜோதிமணி, காரைக்காலில் நேற்று உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து, திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

புதுச்சேரியில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை நகராட்சி முதல் கிராமப் பஞ்சாயத்து வரை அனைத்துப் பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி நிலைப்பாடு குறித்து, புதுச்சேரி மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள்.

காங்கிரஸ் கட்சி வென்றாலும், தோற்றாலும் தொடர்ந்து புதுச்சேரி மக்களுக்காக பணியாற்றி வருகிறது.

தமிழகத்தில் முந்தைய அதிமுக அரசு, பாஜகவுக்கு அடிமையாக இருந்ததுபோலவே, புதுச்சேரியில் தற்போதைய என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான அரசு, பாஜகவுக்கு அடிமையாக உள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கூட என்.ஆர்.காங்கிரஸை மிரட்டியோ அல்லது வற்புறுத்தியோதான் பாஜக பெற்றுள்ளது.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இலவச மருத்துவம் பார்க்கப்படும் என ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது உள்ளிட்ட பல்வேறு அநீதிகளை புதுச்சேரி, தமிழக மக்களுக்கு பாஜக இழைத்து வருகிறது. இதற்கெல்லாம் விடையாக, புதுச்சேரி மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெறச் செய்வார்கள் என்றார்.

SCROLL FOR NEXT