திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த கஸ்தம்பாடி கிராமத்தில் வசித்தவர் கட்டிடத் தொழிலாளி செல்வரசு(29). இவரது வீட்டின் முன்பு உள்ள கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசு மாடு நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த சத்தம் எழுப்பியுள்ளது. அப்போது கனமழை பெய்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால், மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழந்தது.
இதை அறியாமல், பசுவின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த செல்வரசும், அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துள்ளார். இதனால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து களம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.