காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொதுப்பணித் துறையின் நீர்நிலை பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி நேற்று ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம்,வாலாஜாபாத் வட்டம், பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் உள்ள தென்னேரிக்கரையை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏரிக்கரை ஓரத்தில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்ட அவர், சாலைப் பணிகளால் பாதிப்படைந்த ஏரிக்கரையை பலப்படுத்துமாறும், வெள்ள தடுப்பு சுவரை கட்டித் தருமாறும்,மதகு மற்றும் பாசனக் கால்வாய்களை சீரமைக்குமாறும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பழையசீவரம் திருமுக்கூடல் இடையே பாலாற்றின் குறுக்கேபாலம் மற்றும் தடுப்பணை அமைக்கும் பணி ரூ.42.16 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்தும் முடிவடையும் தருவாயில்உள்ளன. இந்தப் பணி முடிவடைந்தவுடன் இடதுபுறம் வாய்க்காலின் மூலம் பாலூர் ஏரிக்கும், வலதுபுறம் வாய்க்காலின் மூலம் அரும்புலியூர் ஏரிக்கும் நீர் சென்றடைந்து சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் அரும்புலியூர் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர்இரா.பன்னீர் செல்வம், பொதுப்பணித் துறை பொறியாளர்கள் பாஸ்கர், மார்கண்டேயன்,பாஸ்கரன் உடன் இருந்தனர்.