Regional02

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு - படகில் செல்ல ஆன்லைன் டிக்கெட் முறை அறிமுகம் :

செய்திப்பிரிவு

கன்னியாகுமரியில் முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கான படகு சேவை உள்ளது. விடுமுறை மற்றும் சீஸன் நேரத்தில் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் படகு பயணத்துக்கு காத்திருப்பர்.

விவேகானந்தர் பாறைக்கு படகு சவாரி செய்ய ஆன்லைன் டிக்கெட் பதிவு முறை கொண்டு வரவேண்டும் என, 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறைக்கு ஆன்லைன் டிக்கெட் முறை நேற்று முதல் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

ஆன்லைன் டிக்கெட் முறையை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமரைபாரதி அறிமுகப்படுத்தி வைத்தார். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் (பொ) செல்லப்பா, உதவி மேலாளர் சண்முகம் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டனர். ஆன்லைன் டிக்கெட் முறை நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து படகு இல்லத்துக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விவேகானந்தர் பாறை, திருள்ளுவர் சிலைக்கு படகு சவாரி செல்ல சாதாரண கட்டணம் ரூ.50, சிறப்பு வரிசை கட்டணம் ரூ.200 வசூலிக்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுகளை tamilshiponlineticket.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

SCROLL FOR NEXT