Regional03

மன்னார்குடியில் அதிகரித்து வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை :

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தெருக்களில் நடமாட முடியாமல் அச்சப்படுகின்றனர். எனவே, இவற்றை கட்டுப்படுத்த நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மன்னார்குடி விலங்குகள் நல ஆர்வலர் ஷாந்தினி கூறியவது:

தெருநாய்களை அடித்துக்கொன்று விடாமல், அவற்றின் பிறப்பை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உரிமம் பெறுகின்ற தனியார் தொண்டு நிறுவனங்கள், தெருநாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, அவற்றை ஓரிரு நாட்கள் பராமரித்து, பின்னர் பிடித்த இடத்திலேயே கொண்டுசென்று விட்டுவிட வேண்டும். இதற்காக நாய் ஒன்றுக்கு ரூ.700 வழங்கப்படுகிறது. மன்னார்குடியில் இத்தகைய அறுவை சிகிச்சை 2019-ம் ஆண்டு செய்யப்பட்டது. அதன்பின்னர் செய்யப்படவில்லை. இந்த அறுவை சிகிச்சையை தொடர்ச்சியாக செய்தாலே தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். மன்னார்குடியில் மட்டுமின்றி திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதே நிலைதான் உள்ளது. எனவே, இதுதொடர்பாக ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT