சென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள காவல் அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்து பார்வையிட்டார். அமைச்சர் சேகர்பாபு, உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல் உயர் பயிற்சியக இயக்குநர் அமல்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 
TNadu

சென்னை எழும்பூரில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் : முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார்

செய்திப்பிரிவு

சென்னை எழும்பூரில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

சென்னை எழும்பூரில் உள்ளபாரம்பரியம் மிக்க பழைய காவல்ஆணையரக அலுவலகம், தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 24 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 2 தளங்களாக உள்ள இக்கட்டிடத்தின் தரைதளத்தில் காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், சீருடைகள், வாத்திய இசைக் கருவிகள், காவல் துறையின் சாதனைகள், மீட்டெடுக்கப்பட்ட சிலைகள், கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம், வெடிகுண்டுகள், குண்டுகளை கண்டெடுக்க உதவும் கருவிகள்,மாதிரி சிறைச்சாலை ஆகியவையும், முதல் தளத்தில் பல்வேறு வகையான துப்பாக்கிகள், வாள்மற்றும் தோட்டாக்களும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

மேலும், காவல் துறையில் சிறப்பாக பணி செய்தவர்களுக்கு வழங்கப்படும் பதக்கங்கள், முக்கிய வரலாற்று ஆவணங்கள், காவல் துறை தொடர்பாக அக்காலத்தில் இயற்றப்பட்ட அதிமுக்கிய அறிவிப்புகள், ஆங்கிலேயர் காலத்து காவல்துறையினர் பயன்படுத்திய ஆயுதங்கள், தமிழக காவல் துறையின் தொடக்க கால சீருடைகள், பெல்ட்,மோப்ப நாய் படைகளின் புகைப்படங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தித் தொகுப்புகள், காவல் ஆணையர் அலுவலக அறையில் இருந்த பழமையான பொருட்கள், அணிவகுப்பு சின்னங்கள், கம்பியில்லா தொலைதொடர்பு கருவிகள், காவல் துறை சேவை பதக்கங்கள், கலைப்பொருட்கள் ஆகியவையும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த காவல் அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த பள்ளி மாணவ, மாணவிகளிடம் முதல்வர் கலந்துரையாடி, இனிப்புகளை வழங்கினார்.

பொதுமக்கள் நாளை (செப்.30)வரை கட்டணமின்றி அருங்காட்சியகத்தைப் பார்வையிடலாம். அக்.1-ம் தேதி முதல் குறைந்த அளவில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் ஏ.கே.விஸ்வநாதன், தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியக இயக்குநர் அ.அமல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT