தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் பாபுராஜா (37). இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக் கூடத்தில் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மதுபானக் கூட உரிமையாளர் கண்ணப்பன் அளித்த புகாரின்பேரில், பெருமாநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து, பாபுராஜாவை கைது செய்தனர்.
இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த பாபுராஜா, நேற்று காலை கண்ணப்பன் நடத்தி வரும் மதுபானக் கூடத்துக்கு சென்று ரூ. 10 ஆயிரம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக தகவல் அறிந்த பாபுராஜாவின், பெற்றோர் அங்கு வந்தனர். அப்போது பலத்த காயங்களுடன் இருந்த பாபுராஜாவை, அங்கிருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக பெருமாநல்லூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.