குடிநீர் மற்றும் பேருந்து வசதி கோரி மடத்துப்பாளையம் கிராம மக்கள் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த பெரிய மடத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள், ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தபின் கூறியதாவது:
பெருந்துறையை அடுத்த பெரிய மடத்துப்பாளையத்தில் 95 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறு மூலம் நாங்கள் குடிநீர் பெற்று வந்தோம். கடந்த சில நாட்களாக நீரின் அளவு குறைவதால், குடிப்பதற்கு தேவையான நீர் கிடைப்பதில்லை. எங்களுக்கு கூடுதலாக ஆழ்குழாய் கிணறு அமைத்து, குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.
நாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து. பெருந்துறை பேருந்து நிலையத்திற்கு மூன்று கிலோமீட்டர் கடந்து செல்ல வேண்டும். கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு எங்கள் பகுதியில் இருந்து பேருந்து நிலையத்திற்கு மினி பேருந்து சேவை இருந்தது. ஆனால் கடந்த மூன்று வருடமாக மினி பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் எங்க பகுதியைச் சேர்ந்தவர்கள். வேலைக்காக பெருந்துறை பேருந்து நிலையம் செல்வதற்காக சைக்கிளில் சென்று வருகின்றனர். தற்போது பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே எங்கள் பகுதிக்கு மீண்டும் மினி பேருந்து சேவையை தொடங்க வேண்டும். அதேபோன்று தண்ணீரும் சீராக வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. அதை சீரமைத்து தர வேண்டும் என்றனர்.