ஆண்டு தோறும் செப்டம்பர் 27-ம் தேதி உலக சுற்றுலா தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் தூத்துக்குடி வஉசி கல்லூரியில்மாணவ, மாணவிகளுக்கு 'சுற்றுலாவும், அதன் உள்ளடங்கிய வளர்ச்சியும்' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.
தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்தில் உலக சுற்றுலா தின விழா கொண்டாடப்பட்டது. விமான நிலையத்துக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு மாலை அணிவித்து இனிப்பு, முகக்கவசம், சானிடைசர் மற்றும் சுற்றுலா கையேடு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை விமான நிலைய இயக்குநர் ந.சுப்பிரமணியன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் விமான நிலைய மேலாளர் செ.ஜெயராமன், விமான நிலைய காவல் சார்பு ஆய்வாளர் கனகராஜ், வஉசி கல்லூரி பேராசிரியர் சங்கர் மற்றும் தனியார் ஹோட்டல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட சுற்றுலா அலுவலர் க.சீனிவாசன் நன்றி கூறினார். தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் தூய்மையே சேவை வாரத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.