செல்போன் கோபுரம் அமைப்பதற்கு வாடகைக்கு நிலம் வழங்கினால், அட்வான்ஸ் ரூ.30 லட்சம், வாடகை ரூ.35 ஆயிரம் வழங்குவதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.6.92 லட்சத்தை மோசடி செய்த 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலத்தை அடுத்த சித்தனூரைச் சேர்ந்தவர் சகாயமேரி (55). இவரது செல்போனுக்கு, ‘உங்கள் நிலத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு அனுமதித்தால், அதற்கு அட்வான்ஸ் ரூ.30 லட்சம், மாத வாடகை ரூ.35 ஆயிரம் வழங்கப்படும்’ என ஒரு செல்போன் கோபுர நிறுவனத்தின் பெயரில் குறுஞ்செய்தி வந்தது.
அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய சகாயமேரி, அவர்கள் கூறியபடி, ஆவணக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் உள்பட மொத்தம் ரூ.6.92 லட்சத்தை, முன்பணமாக செலுத்தினார். அதன் பின்னர் பேச முற்பட்டபோது, அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, சேலம் மாநகர சைபர் கிரைம் போலீஸில் சகாயமேரி புகார் தெரிவித்தார். மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவின்பேரில், சைபர் கிரைம் போலீஸார் 3 தனிப்படை அமைத்து, விசாரணை மேற்கொண்டனர்.
சகாயமேரியை தொடர்பு கொண்ட செல்போன் எண்களை ஆராய்ந்து, அதனைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட திருப்பூரைச் சேர்ந்த மல்லையா (38), சந்திரசேகர் (36), நவீன் (21), சுதாகரன் (19), டெல்லியைச் சேர்ந்த சிவா (30), சூர்யா (24), திண்டுக்கல்லைச் சேர்ந்த தனசேகர் (27), மோகன்பிரபு (23), குணசேகரன் (23), பிரபு (20), சவுந்தரபாண்டியன் (28), அருண்குமார் (23), சதீஷ்குமார் (24) ஆகிய 13 பேரை கைது செய்தனர். விசாரணையில், 13 பேரும் பெங்களூருவில் தங்கி, Insite Towers Pvt Ltd., என்ற பெயரில், தமிழகம் முழுவதும் மொத்தமாக எஸ்எம்எஸ். அனுப்பி, பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் இருந்து, 34 செல்போன்கள், 45 சிம் கார்டுகள், 20 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், ரூ.48,500 ரொக்கம், 2 லேப் டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.