Regional01

ஐம்பொன் சிலை திருட்டு வழக்கில் - பல்லடம் அருகே தந்தை, மகன் உட்பட 3 பேர் கைது :

செய்திப்பிரிவு

பல்லடம் அருகே ஐம்பொன் சிலை திருட்டு வழக்கில், 3 ஆண்டுகளுக்குப்பின் தந்தை, மகன் உட்பட மூவரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பருவாயில் நீலியம்மன் கோயிலில், நீலியம்மன், பாலமுருகன், பாலவிநாயகர், கன்னிமார் ஆகிய ஐம்பொன் சிலைகள் உள்ளன. சாமி ஊர்வலத்துக்காக 55 கிலோ எடையுள்ள நீலியம்மன் சாமியின், ஐம்பொன் சிலையும் இருந்தது. கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட், 29-ம் தேதி கோயில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், நீலியம்மன் ஐம்பொன் சிலை, கிரீடம், அரை சவரன் தங்கத்தாலி மற்றும் உண்டியல் காணிக்கை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். கோயில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

இவ்வழக்கு கடந்த ஜூலை மாதம் கோவை சரக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, விசாரிக்கப்பட்டது. அதில், திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கோவை மாவட்டம் சூலூர் அருகே பதுங்கி இருப்பது தெரியவந்தது. அப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த முருகேஷ் (47) அவரது மகன் திருமூர்த்தி (21) மற்றும் முத்துகவுண்டன்புதூரை சேர்ந்த வடிவேல்(38) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஐம்பொன் சிலையை திருடிய சில வாரத்தில், வேறொரு வழக்கில் சூலூர் போலீஸில் அவர்கள் சிக்கியதும், அப்போது நீலியம்மன் கோயிலில் சிலை திருடியதை ஒப்புக்கொண்டதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து சிலையை பறிமுதல் செய்த காமநாயக்கன்பாளையம் போலீஸார், கடந்த மூன்று ஆண்டுகளாக காவல் நிலையத்திலேயே சிலையை வைத்திருந்ததும் தெரியவந்தது. கடந்த 3 ஆண்டுகளாக சிலையை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமலும், குற்றவாளிகளை கைது செய்யாமலும் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து காமநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் இருந்து சிலையை மீட்டு, நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட மூவர் மீதும் ஏற்கெனவே பல்லடம், சுல்தான்பேட்டை, சூலூர் பகுதி கோயில்களில் திருடியது உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது, தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT