சேலத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் நகை பறித்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் பெரமனூர் நாராயணன் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவர் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பானுமதி (63), வணிக வரி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று காலை பானுமதி வீட்டு அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டார். பின்னர் பால் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பானுமதியை கடந்து சென்று, மீண்டும் வாகனத்தை வளைத்து வந்து, அவரது கழுத்தில் இருந்த நான்கரை பவுன் தங்க சங்கலியை அறுத்துக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்து அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.