சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்லை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு சட்ட விரோதமாக பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதைத் தடுக்க வட்டாட்சியர்கள் தலைமையில் 6 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் மாவட்டகவுன்சிலர்- ஒரு பதவி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்- ஒரு பதவி, கிராம ஊராட்சித் தலைவர்- 10 பதவிகள், கிராம வார்டு உறுப்பினர் 13 பதவிகள் உள்ளிட்ட 35 காலியாகவுள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் முடிவுற்ற நிலையில், வாக்காளர்களுக்கு சட்ட விரோதமாக பணம், பரிசுப் பொருட்களை வழங்குவது உள்ளிட்டவற்றை தடுக்க, பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் ஓமலூர் வட்டாரத்தில் வட்டாட்சியர்கள் தலைமையில் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, அவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் பகுதிகளைக் கண்காணிக்க வட்டாட்சியர்கள் தலைமையில் 3 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கிராம ஊராட்சித் தலைவர் பதவி, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி ஆகியவற்றுக்கான தேர்தல் நடைபெறவுள்ள இடங்களில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் கண்காணிப்பு மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.