கேரளா பயணிகளிடம் ரயிலில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது தொடர்பாக சேலம் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ரயில்வே போலீஸார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் திருவல்லா பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி. இவர் டெல்லியில் வசித்து வரும் நிலையில், மகள் அஞ்சலியுடன் கடந்த 11-ம் தேதி உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நிஜாமுதீன்-திருவணந்தபுரம் விரைவு ரயிலில் புறப்பட்டு வந்தார். அதே ரயிலில் கோவையைச் சேர்ந்த கவுசல்யா என்பவரும் காயங்குளத்துக்கு பயணம் செய்தார்.
திருவனந்தபுரம் ரயில் வந்தநிலையில், விஜயலட்சுமி, அஞ்சலி, கவுசல்யா மூவரும் மயக்க நிலையில் படுத்து இருந்தனர்.
தகவல் அறிந்து அங்கு சென்று ரயில்வே போலீஸார் நடத்திய விசாரணையில் மர்ம நபர்கள் மூவருக்கும் உணவில் மயக்க மருந்து கொடுத்து, 17 பவுன் நகை மற்றும் ரூ.1,600, 3 செல்போன்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க திருவணந்தபுரம் ரயில்வே போலீஸார், பழைய ரயில் கொள்ளையர்கள் படத்தை மூவரிடம் காட்டியதில், உபி-யைச் சேர்ந்த அக்சர்பாக்சே ரயிலில் இவர்களுடன் பயணம் செய்து, நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இக்கொள்ளை சம்பவம் சேலம் - பாலக்காடு ரயில்வே நிலையங்களுக்கு இடையே நடந்து இருக்க கூடும் என்பதால், சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் உள்ளிட்ட சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் ரயில்வே போலீஸார் கொள்ளையர்களை அடையாளம் கண்டுபிடிக்கும் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம், திருப்பூர், ஈரோடு, கோவை ரயில்வே நிலையங்களில் ரயில் நின்ற போது, கொள்ளை கும்பல் இறங்கினார்களா அல்லது எந்த ரயில் நிலையத்தில் இருந்து அவர்கள் தப்பி சென்றனர் என்பது குறித்து ரயில்வே போலீஸார் சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து, கொள்ளை கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.