Regional02

கனிம திருட்டை தடுக்க ஆளில்லா விமானம் மூலம் அளவீடு : கிருஷ்ணகிரியில் நீர்வளத்துறை அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

சட்டவிரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுப்பதை தடுக்க, ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்து தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை தொடர்பான துறை சார்ந்த அனைத்து மாவட்ட அலுவலர்களின் செயல் திறன் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடந்தது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை வகித்தார். புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் நிர்மல்ராஜ், சேலம் தமிழ்நாடு மேக்னசைட் லிமிடெட் மேலாண்மை இயக்குநர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:

கடந்த 4 மாதத்தில் கனிம வருவாய் ரூ.428.62 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இனி வரும் மாதங்களில் கனிம வருவாய் அதிகரிக்க ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அண்டை மாநிலங்களுக்கு அனுமதியின்றி கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை முற்றிலும் தடுக்க வேண்டும்.

கனிம திருட்டினை முற்றிலும் தடுத்து, மாநில அரசுக்கு அதிகளவில் வருவாய் ஈட்டி தர வேண்டும். இதேபோல் உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகளை கண்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பல்வேறு நீதிமன்ற வழக்குகளில் வழங்கப்பட்ட, நீதிமன்ற ஆணைகள்படி நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும்.

சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பது தொடர்பாக, பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்வதுடன் அப்பகுதிகளை களஆய்வு மேற்கொண்டு, தேவைப்படின், ஆளில்லா விமான தொழில்நுட்பத்தின் மூலம் அளவீடு செய்து தொடர்புடைய நபர்கள் மீது விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். புவியியல் மற்றும் சுரங்கத் துறையினை மேம்படுத்தும் நோக்கில் அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தர அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

SCROLL FOR NEXT