ராஜகுமாரி. (கோப்புப்படம்) 
Regional01

தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க மறுப்பு : பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான மருத்துவ சிகிச்சையால் உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க உறவினர்கள் நேற்று மறுத்துவிட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ரங்கப்பனூர் கிராமத்தில் வசிப்பவர் முருகன். இவரது மனைவி ராஜகுமாரி(39). கர்ப்பப் பையில் இருந்த நீர் கட்டியை அகற்ற, திருவண் ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு, லேப்ரோஸ்கோபி மூலமாக கடந்த 20-ம் தேதி, நீர் கட்டியை அகற்ற சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்போது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட தால், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் அளித்தும், உயிர் காக்கும் மருந்துகளை செலுத்தியும் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் தி.மலை நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, திருவண் ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராஜகுமாரியின் உடல் நேற்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், உறவினர்களிடம் உடலை ஒப்படைக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர். ஆனால், பிரேதப்பரிசோதனை அறிக்கை வழங்கிய பிறகு தான், உடலை பெற்றுக் கொள்வோம் என முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சிவக்குமார் கூறும்போது, “பிரேதப்பரிசோதனை செய்ததும், முதற்கட்ட அறிக்கையை உடனே வழங்கப்படும். ஆனால், ராஜகுமாரி யின் உடல், பிரேதப்பரிசோ தனை செய்யப்பட்ட பிறகு, முதற்கட்ட அறிக்கையை வழங் காமல் அலைக்கழிக்கின்றனர். நாளை (இன்று) வழங்குவதாக தெரிவித்துள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வழங்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி விட்டோம்.

மேலும், தி.மலை ஆட்சியர் பா.முருகேஷை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். அதில், தவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் உயிரை கருத்தில் கொண்டு, சம்பந்தப் பட்ட மருத்துவமனை தொடர்ந்து செயல்பட அனுமதிக்கக் கூடாது. ராஜ குமாரி மரணத்தை சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தி, உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். அவரும், நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள் ளப்படும்” என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக, செங்கம் சாலை மற்றும் ஆட்சியர் அலுவலகம் முன்பு உறவினர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT