கடலூரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் நடந்தது. 
Regional01

வடகிழக்கு பருவமழையால் பாதிப்பு ஏற்பட்டால் - தன்னார்வ அமைப்புகள் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் : கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுரை

செய்திப்பிரிவு

பேரிடர் காலங்களில் தன்னார்வ அமைப்புகள் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், தனியார் பள்ளிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பேசியது:

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சம்மந்தப்பட்ட கிராம குழுக்களுடன் இணைந்து பணிபுரிதல் வேண்டும். பேரிடர் சமயங்களில் பொதுமக்களை பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு கொண்டு சென்று அவர்களுக்குத் தேவையான உணவு,குடிநீர், உடை மற்றும் மருத்துவ வசதிகளை செய்திட மாவட்ட நிர்வாகத்திற்கு உதவி புரிய வேண்டும். தனியார் மருத்துவமனைகள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருந்து பொருட்கள் போதுமான அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் உள்ள கட்டிடங்கள் மழையினால் பாதிக்கப்படக் கூடிய நிலையில் இருந்தால் அதனை பழுது நீக்கம் செய்து மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும். பேரிடர் காலத்தில் தொலை தொடர்பு துண்டிப்பு ஏற்படாவண்ணம் டீசல், ஜெனரேட்டர் வசதிகளை தயார் நிலையில் வைத்திட வேண்டும் என்றார். கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜித்சிங்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) டெய்சிகுமார், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT