குன்னம் அருகே காருகுடியில் விபத்தில் உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட மூதாட்டியின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர். 
Regional01

விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு; நிவாரணம் கோரி சாலை மறியல் :

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் காருகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி பேச்சியம்மாள்(70). இவர், நேற்று முன்தினம் பெரம்பலூரில் இருந்து காருகுடிக்கு அரசு நகரப் பேருந்தில் சென்றபோது, முன்புற படிக்கட்டிலிருந்து தவறி கீழே விழுந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், மூதாட்டியின் உயிரிழப்புக்கு காரணமான அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸாரை கண்டித்தும், மூதாட்டியின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே பெரம்பலூர்- துறையூர் சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், மூதாட்டியின் உறவினர்களும் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பெரம்பலூர் போலீஸார் சமாதானப்படுத்தியதை அடுத்து, மறியல் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT