கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் த.கலைவாணி மற்றும் தொழிலாளர் நல உதவி ஆணையர் கிருஷ்ணவேணி ஆகியோர் தலைமையிலான குழுவினர் கரூர் பேருந்து நிலையம், ஜவகர் பஜார் மற்றும் வெங்கமேடு பகுதிகளில் உள்ள டீ கடைகள், பேக்கரிகள் மற்றும் ஹோட்டல்கள் என 55-க்கும் மேற்பட்ட கடைகளில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், 6 டீ கடைகளில் 10 கிலோவுக்கும் அதிகமாக கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டது. மேலும், உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 18 ஹோட்டல்களுக்கு ரூ.54,000 அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதுபோன்று உணவுப் பொருளின் தரம், கலப்பட டீ தூள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பான புகார்களை உணவு பாதுகாப்பு துறைக்கு 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.