Regional02

கர்ப்பப்பை நீர் கட்டியை அகற்றும்போது கவனக்குறைவு? - தி.மலையில் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் :

செய்திப்பிரிவு

திருவண்ணாமலையில் கர்ப்பப் பையில் நீர் கட்டியை அகற்ற, தவறான சிகிச்சை அளித்ததால் பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனக் கூறி, அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அடுத்த ரங்கப்பனூர் கிராமத்தில் வசிப்பவர் முருகன். இவரது மனைவி ராஜகுமாரி (39). இவரது கர்ப்பப் பையில் நீர்கட்டி இருந்ததால், திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், லேப்ரோஸ்கோபி மூலம் நேற்று முன்தினம் நீர்கட்டியை அகற்றும் போது தவறான சிகிச்சை அளிக்கப் பட்டதால், ராஜகுமாரியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனக் கூறி, மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த தகவலறிந்த திருவண்ணா மலை உதவி எஸ்.பி., கிரண்ஸ்ருதி தலைமையிலான காவல்துறையினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உறவினர்கள் கூறும் போது, “ராஜகுமாரியின் வயிற்று பகுதியில் 2 துளையிட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு திடீரென இதயம் பாதிக்கப்பட்டு, மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், உடனடியாக உயர் சிகிச்சை தேவை எனக் கூறி ஆம்புலன்ஸ் மூலமாக, திருவண் ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் ” என்றனர். காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. முன்னதாக அந்த மருத்துவமனை மூடப்பட்டது.

சிபிஎம் கட்சி போராடும்...

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவக்குமார் கூறும்போது, “தவறான சிகிச்சையால் ராஜகுமாரியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, அவரது கணவர் முருகன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் ராஜ குமாரியின் கணவர் முருகன் மூலம் புகார் கொடுக்கப்பட்டு சிஎஸ்ஆர் பெறப்பட்டுள்ளது. ராஜ குமாரியின் உடல் நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லை என தெரியவருகிறது. அவரது உயிருக்கு, ஏதாவது நேர்ந்தால் மருத்துவரை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தை முன்னேடுக்கும்” என தெரிவித்தார்.

முன்னேற்றம் இல்லை...

அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இப்போது உள்ள நிலையில், அவரை பிற மருத்துவமனைக்கு கொண்டு செல்வதும் ஆபத்து. அவரை காப்பாற்ற தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள் ளோம்” என்றனர்.

SCROLL FOR NEXT