ஈரோட்டில் பெண் ஊழியர்களை செல்போன் மூலம் போட்டோ எடுத்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அரசு அலுவலரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி கொல்லாங்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (33). ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தார். அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களை, அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்த சதீஷ்குமார், அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் ஊழியர், ஈரோடு சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். விசாரணையில், பெண் ஊழியர்களை அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் சதீஸ்குமார் பதிவேற்றியுள்ளது உறுதியானது.
இதையடுத்து, தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் செயல்படுவது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.