மகனிடம் இருந்து நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த வயதான தம்பதியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். 
Regional01

மகனிடம் இருந்து நிலத்தை மீட்டு கொடுக்க கோரிக்கை :

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்தூர் வட்டம் சோ.பள்ளம் கிராமத்தில் வசிப்பவர்கள் செல்ல குட்டி(84), அவரது மனைவி நாவம்மாள் (75). இவர்கள் தங்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை, அவர்களது கடைசி மகன் தண்டபாணிக்கு எழுதி கொடுத் துள்ளனர். அதன் பிறகு அவர்களை பராமரிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் வயதான தம்பதியான செல்லகுட்டி, நாவம்மாள் ஆகியோர் அண்டம் பள்ளம் கிராமத்தில் உள்ள மகள் வீட்டில் வசித்து வருகின்றனர். எனவே, தங்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் இருவரும் நேற்று மனு அளித்துள்ளனர்.

இதேபோல், தமிழ் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமையில் அளித்துள்ள மனுவில், “சேத்துப்பட்டு அடுத்த செவரப்பூண்டி கிராமத்தில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை, தேனிமலை பகுதியில் வசிக்கும் ராஜா மனைவி கம்சலா, ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு நேற்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். அப்போது காவல்துறையிடம் கம்சலா கூறும்போது, “தேனிமலையில் உள்ள புறம்போக்கு இடத்தில் 15 ஆண்டுகளாக வசிக்கிறோம். அந்த இடத்தை எனது கணவர் மற்றும் அவரது அண்ணன் சம்பத்துக்கு மாமனார் கண்ணன் கொடுத் துள்ளார். மாமனார் மறைவுக்கு பிறகு, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டோம். இதற்கு, சம்பத் மனைவி பத்மாவதி எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

இதுகுறித்த விசாரணை நடத்தி, நாங்கள் குடியிருக்கும் இடத்துக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

SCROLL FOR NEXT