கடத்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட பொது விநியோகத்திட்ட அரிசி வரும் 23-ம் தேதி நாமக்கல் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் ஏலம் விடப்பட உள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
நாமக்கல் வள்ளிபுரம் சாலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு அமைந்துள்ளது. இந்த கிடங்கில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் 17,350 கிலோ குருணை அரிசி வைக்கப்பட்டுள்ளது. இந்த அரிசி கடத்தலின்போது அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அரிசி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் வரும் 23-ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது.
ஏலத்தில் பங்கேற்போர் அஞ்சல் உறையில் தங்களது பெயர் மற்றும் முழு முகவரியுடன் அரிசி குருணை விலையினை நிர்ணயம் செய்து முத்திரையிடப்பட்டு வரும் 23-ம் தேதி காலை 10 மணிக்கு வழங்க வேண்டும். ஏலம் முடிந்த பின்னர் ஏலம் கோரியவர் அன்றைய தினமே அரிசி குருணைக்கான தொகையை உரிய அரசு கணக்கில் செலுத்த வேண்டும். ஏலத்தில் பங்கேற்போர் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.