ஊரக, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க, ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், கடந்த 2019-ம் ஆண்டு நிரப்பப்பட்ட பதவியிடங்களில், இறப்பு, பதவி விலகல் உள்ளிட்ட காரணங்களால் 27 காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான தேர்தல் 11 ஒன்றியங்களில் நடக்க வுள்ளது.
இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கும், இரண்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 4 சிற்றூராட்சித் தலைவர்கள் மற்றும் 20 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் அக்டோபர் 9-ம் தேதி நடக்கிறது.
இந்த தேர்தலுக்கான கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலக 3-ம் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் குறித்து ஏதேனும் குறைகள் மற்றும் புகார் இருப்பின், ஆட்சியரின் நேர்முக உதவியாளரை, (வளர்ச்சிப்பிரிவு) 0424-2266766 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம், என ஈரோடு ஆட்சியர் எச். கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.