சேலத்தில் சரக்கு வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.46 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை வணிக வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவைக்கு வரி செலுத்தாமல் தங்கம், வெள்ளி நகைகள் லாரிகளில் கொண்டு செல்லப்படுவதாக, மாநில வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சேலம் குரங்குச்சாவடி பகுதியில் சேலம் கோட்ட வணிக வரித்துறை நுண்ணறிவு குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில், உரிய விற்பனை ஆவணங்கள் இன்றி வெள்ளிக்கட்டிகள், தங்கம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.உடனடியாக தங்கம், வெள்ளிப் பொருட்களுடன் சரக்கு வாகனத்தை வணிக வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி, ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
ரூ.1.20 கோடி மதிப்பிலான 183 கிலோ எடையிலான வெள்ளி ஆபரணங்கள் ரூ.26 லட்சம் மதிப்பிலான அரை கிலோ தங்க ஆபரணங்களை வணிகவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உரிய விற்பனை ஆவணங்கள் இன்றி தங்கம், வெள்ளிப் பொருட்களை கொண்டு சென்றது சம்பந்தமாக தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.