Regional02

வரி வருவாய் அதிகம் உள்ள ஊராட்சிகளை கைப்பற்ற திமுக, அதிமுக வேட்பாளர்கள் தீவிரம்

செய்திப்பிரிவு

திருப்போரூர் ஒன்றியத்தில் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களால் வரி வருவாய் அதிகமாக உள்ள கிராம ஊராட்சிகளின் பதவிகளை கைப்பற்றுவதற்காக, கவர்ச்சிகர திட்டங்களை அறிவிப்பதற்கான ஏற்பாடுகளை திமுக -அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மேற்கொண்டுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில் சிறுசேரி, தாழம்பூர், நாவலூர், படூர், கேளம்பாக்கம், மேலக்கோட்டையூர், கோவளம், முட்டுக்காடு, தையூர், ஆலத்தூர் உள்ளிட்ட 50 கிராம ஊராட்சிகள் அமைந்துள்ளன.

இந்த கிராம ஊராட்சிகள் அனைத்தும், சென்னையின் புறநகர் பகுதிகளாக விளங்குவதால், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிக அளவில் அமைந்து வருகின்றன. மேலும், சிறுசேரி மற்றும் ஆலத்தூர் ஊராட்சிகளில் தொழிற்பூங்காக்கள் அமைந்துள்ளன.

இதனால், இந்த கிராமஊராட்சி நிர்வாகங்களுக்கு, தொழிற்சாலை மற்றும் தொழில் நிறுவனங்களால் மட்டும் ஆண்டுதோறும் ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரையில் வரி வருவாய் கிடைக்கிறது.

இதனால், வரி வருவாய் அதிகமுள்ள இந்த கிராம ஊராட்சிகளின் பதவிகளை, உள்ளாட்சி தேர்தல் மூலம் கைப்பற்ற அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக, பல்வேறு கவர்ச்சிகர வாக்குறுதிகளை வெளியிட்டு வாக்கு சேகரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும், ஆளும்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடிக்காமல் உள்ளது. ஒரிரு நாட்களில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் நிலைஉள்ளதால், தங்களுக்கு சீட்கிடைக்கும் என நம்பும் வேட்பாளர்கள் வாட்ஸ் அப், முகநூல் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னரே கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் வெளியாகும் என அரசியல்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் இந்த ஊராட்சிகளில் பதவிகளை பிடிப்பதற்காக பல்வேறு வகையில் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT