தூத்துக்குடி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவிஇயக்குநர் ச.அசோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை முறை வேளாண்மையில் மானாவாரி பருவத்தில் 120 முதல் 125 நாட்கள் வயதுடைய செடி முருங்கை சாகுபடி செய்தால் முதல்அறுவடைக் காலத்தில் ஒரு மரத்துக்கு 115 காய்களும், கோடை பருவத்தில் 90 காய்களும் கிடைக்கும். ஒரு காயின் அளவு 200 கிராம் எடைஉள்ளதாக இருக்கும். இதனால் ஒரு மரத்துக்கு 25 கிலோ காய்கள் கிடைக்கும்.
இயற்கை வேளாண்மையில் பஞ்சகாவியா, ஜீவஅமிர்தம், மீன்அமிலம், தேமோர் கரைசல், தொழுஉரம், பசுந்தாள் உரம் இடுவதால் காயின் எடை அதிகமாகி மகசூலும்அதிகரிக்கிறது. ஒரு ஏக்கருக்கு 1,000 மரங்கள் நடுவதால் 25 டன்மகசூல் மற்றும் கால்நடைகளுக்கு தீவனமும் கிடைக்கும். மண்வளமும் பாதுகாக்கப்படும். செடி முருங்கை நட்டு மகசூல் முடிந்தவுடன் கவாத்து செய்து மீண்டும் காய்க்க வைத்து 5 ஆண்டுகள் வரை மகசூல் எடுக்கலாம்.
மேலும், ஊடுபயிராக உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, சாகுபடி செய்வதால் நான்கு குவிண்டால் வரை ஊடுபயிர் மகசூலும் கிடைக்கும். இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்கள் சுவையானதாக இருப்பதால் அதிக விலை கிடைக்கும். எனவே, இயற்கை வேளாண்மையில் செடி முருங்கை சாகுபடி செய்து ,அங்ககச்சான்றுத் துறையில் பதிவு செய்து விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.