அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவர் தொடர்பான வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஹார்டு டிஸ்குகள், பென் டிரைவ்களில் இருக்கும் விவரங்களை திரட்ட சென்னையில் உள்ள சைபர் தடய அறிவியல் பிரிவுக்கு லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி (57) வருமானத்துக்கு அதிகமாக 654 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்திருப்பதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் விஜய் கடந்த 15-ம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து, 35 இடங்களில் நேற்று முன்தினம் சோதனை நடைபெற்றது. இதில், ஏராளமான சொத்து ஆவணங்கள், 8 ஹார்டு டிஸ்குகள், பென் டிரைவ்கள், ரூ.34 லட்சம் ரொக்கம், ரூ.1.80 லட்சம்மதிப்பிலான அமெரிக்க டாலர் நோட்டுகள், 4.987 கிலோ தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள்,7.2 கிலோ வெள்ளி பொருட்கள், 9 சொகுசு கார்கள், வங்கி கணக்குபுத்தகங்கள், லாக்கர் வைத்திருப் பதற்கான ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், வீரமணியின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 275 யூனிட் மணல் கனிமவள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை ஆய்செய்த அதிகாரிகள் குழுவினர் அது தொடர்பான விரிவான அறிக்கையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கவுள்ளனர்.
இதற்கிடையில், 35 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவுகாவல் துறையினர் வசம் ஒப்படைத்துள்ளனர். இவற்றை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘வீரமணி மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில், சென்னையில் 'சீல்' வைக்கப்பட்ட வீடுகளில் இன்று (நேற்று) சோதனை நடைபெற்று வருகிறது.
எனவே, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் விவரங்களை நீதிமன்றத்தில் கணக்கு காட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மேலும், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் மற்றும் பென் டிரைவ்களை சென்னையில் உள்ள சைபர் தடய அறிவியல் பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதில் இருக்கும் தகவல்களை பெற்று வழக்கு விசாரணைக்கு பயன்படுத்தப்படும். பறிமுதல் செய்யப்பட்ட 9 சொகுசு கார்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் மதிப்பீடு செய்யப்படும். மேலும், அந்த வாகனங்களை யாருக்கும் விற்க முடியாதபடி முடக்கி வைக்கப்படும். பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
தேவை இருந்தால் நீதிமன்றத் தின் மூலம் வீரமணி தரப்பினர் அவற்றை பெற்றுக்கொள்ளலாம். நீதிமன்றம் கேட்கும்போது அதை அவர்கள் சேதமடையாமல் திரும்ப ஒப்படைக்க வேண்டும். வீரமணியின் வங்கிக் கணக்குகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்வதை முடக்கியுள்ளோம்.
வங்கி லாக்கர்கள் திறந்து பார்க்கவும் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தனர்.