திருச்செங்கோடு அருகே பெட்ரோல் பங்க் மேலாளரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தொடர்பாக நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த சித்தாளந்தூர் அருகே கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு மேலாளராக பணிபுரிந்து வரும் வேணுகோபால், ரூ.4.82 லட்சத்தை வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மிரட்டி பறித்துச் சென்றனர். கடந்த 11-ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, திருச்செங்கோடு ஊரக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில் சிக்கிய மூவரிடம் நடத்திய விசாரணையில், ராமாபுரத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (28), பிரபாகரன் (29), தினேஷ்பாபு (34) என்பதும், பெட்ரோல் பங்க் மேலாளரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும், வழிப்பறியில் பெட்ரோல் பங்கின் முன்னாள் ஊழியர் ஜீவானந்தம் (25) என்பவர் உட்பட மேலும் 6 பேருக்கு தொடர்புள்ளது தெரியவந்தது.
இதையடுத்து ஜீவானந்தம் உட்பட 4 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து ரூ.1.10 லட்சம் ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.