Regional01

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 3 மாணவர்களுக்கு கரோனா :

செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக, கடந்த 1-ம் தேதி முதல் ஈரோட்டில் 395 பள்ளிகளில், 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் தொடங்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவர்களில் புன்செய் புளியம்பட்டி அரசுப் பள்ளியில் ஒரு மாணவர், கோபி மணியக்காரன் புதூர் அரசுப் பள்ளியில் ஒரு மாணவி, அந்தியூர் பருவாச்சியில் செயல்படும் தனியார் பள்ளி மாணவி ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கவுந்தப்பாடி அரசுப் பள்ளியில் 4 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொற்று உறுதி செய்யப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களில் யாருக்கும் பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தியூர் அரசுப் பள்ளி மாணவி ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்தியூர் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டுள்ளார். அப்பள்ளி மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் என 780 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பவானி மற்றும் ஈரோட்டில் செயல்படும் இரு பள்ளிகளில் படிக்கும் இரு மாணவர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளான மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT