Regional01

பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் - மன அழுத்தத்தைப் போக்க ஆலோசனை வழங்க வேண்டும் : கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து

செய்திப்பிரிவு

பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு, அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது: நீட் தேர்வை ரத்து செய்வதற்கான தமிழக அரசின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். இல்லையென்றால், நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்று தான் தீர்வு காண முடியும்.

நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் தமிழக மக்களின் பரவலான கருத்து. தனியார் பள்ளிகளில் படித்து, பயிற்சி வகுப்புக்கு செல்பவர்கள் மட்டுமே ‌நீட் தேர்வில் தேர்ச்சி அடைகின்றனர். அந்த வசதி இல்லாதவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவது கிடையாது. மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க அனைத்து பள்ளிகளிலும் கட்டாயமாக மன நல ஆலோசனை வழங்க‌ வேண்டும்.

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இது காங்கிரஸ் கட்சியிலேயே செய்யப்படுவது இல்லை. பெண்களுக்கு தேர்தலில் நிற்க அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுவருகிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ளதை செயல்படுத்தினாலே மக்களுக்கு தேவையான அனைத்து வசதியும் கிடைக்கும் என்றார்.

SCROLL FOR NEXT