பாஜக தேசிய மகளிர் அணித் தலைவியும், கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனின் மகன் ஆதர்ஷ் (23). இவர் நேற்று முன்தினம் இரவு காரில் கோவையில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவர் ஓட்டி வந்தார்.
சேலம் கொண்டலாம்பட்டி பட்டர்ஃபிளை மேம்பாலத்தில் கார் வந்தபோது, எதிர்பாராதவிதமாக பாலத்தின் சுவர் மீது கார் மோதியது. இதில், கார் பலத்த சேதமடைந்தது. எனினும், சீட் பெல்ட் அணிந்திருந்ததால் லேசான காயங்களுடன் ஆதர்ஷ் தப்பினார். தகவல் அறிந்து அங்கு சென்ற சேலம் பாஜகவினர் மற்றும் அன்னதானப்பட்டி போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆதர்ஷ்க்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் அவர் வேறொரு காரில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். இதுதொடர்பாக அன்னதானப்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர். “பட்டர்ஃபிளை மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியாமல் இருந்ததாலும், போதுமான எச்சரிக்கை பலகைகள் பாலத்தில் இல்லாததுமே விபத்துக்கு காரணம்” என பாஜகவினர் தெரிவித்தனர்.