ஆத்தூர் கொத்தாம்பாடியில் உறங்கி கொண்டிருந்த முதிய தம்பதி இருந்த குடிசைக்கு தீ வைத்து கொலை செய்தது தொடர்பாக சேலம் எஸ்பி அபிநவ் விசாரணை நடத்தினார். 
Regional01

ஆத்தூர் அருகே குடிசைக்கு தீ வைத்து - தாத்தா, பாட்டியை கொன்ற பேரன் கைது : மற்றவர்களுடன் ஒப்பிட்டு கண்டித்ததால் விபரீதம்

செய்திப்பிரிவு

ஆத்தூர் அருகே குடிசைக்கு தீ வைத்து தாத்தா, பாட்டியை கொலை செய்த 16 வயது பேரனை போலீஸார் கைது செய்தனர்.

ஆத்தூர் அடுத்த கொத்தாம்பாடி பாரதியார் நகரில் குடிசை வீட்டில் வசித்து வந்தவர் காட்டுராஜா (75). இவரது மனைவி காசியம்மாள் (70). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களுடன் இரண்டாவது மகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று காட்டுராஜாவின் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற ஆத்தூர் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, காட்டுராஜா மற்றும் காசியம்மாள் தீயில் கருகி உயிரிழந்திருந்தனர். இதுதொடர்பாக சேலம் எஸ்பி அபிநவ் தலைமையில் ஆத்தூர் தாலுகா போலீஸார் அங்கு விசாரணை நடத்தினர். இதனிடையில், காட்டுராஜாவின் 16 வயது பேரன் ஆத்தூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

“தனது தாத்தா, பாட்டி மற்றும் பெரியப்பா ஆகியோர் தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டு படிக்க வலியுறுத்தியதால், ஆத்திரத்தில் அவர்களை கொலை செய்ய கத்தியுடன் சென்றதாகவும், அப்போது தாத்தாவும், பாட்டியும் உறங்கிக் கொண்டிருந்ததால், குடிசையை பூட்டி தீ வைத்ததாகவும், இதில், அவர்கள் உயிரிழந்ததாக” சரண் அடைந்த பேரன் தெரிவித்தார். இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT