Regional02

நகை பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது :

செய்திப்பிரிவு

திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி மாலதி. தம்பதியர் கடந்த ஜூலை மாதம் பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்தொடர்ந்து வந்த இருவர், மாலதி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பினர். இதுகுறித்து கருப்புசாமி அளித்த புகாரின் பேரில், வடக்கு போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்டம் சிற்றரசன்கோட்டை பகுதியில் பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்துவிட்டு, ஒரே வாகனத்தில் 3 பேர் தப்பிச்சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதில் தொடர்புடைய உதயகுமார் என்பவரை, அனுப்பர்பாளையம் போலீஸார் வாகன திருட்டு வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, கூட்டாளிகளான போயம்பாளையம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(23) மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன்(23) ஆகிய இருவரை திருப்பூர் வடக்கு போலீஸார் நேற்று கைது செய்து, இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனர். இருவரும் மாலதி உட்பட பல்வேறு பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT