Regional01

ஆரோக்கிய இந்தியா சுதந்திர தின ஓட்டம் :

செய்திப்பிரிவு

சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில் விருதுநகரில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர தின ஓட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மூலம் 2019 ஆண்டு முதல் ஆரோக்கிய இந்தியா எனும் தலைப்பில் தொடர் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கவும், மக்களிடையே உடற்பயிற்சி, ஆரோக்கியம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஓட்டம் நடத்தப்படுகிறது.

அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து ஆரோக்கிய இந்திய சுதந்திர தின ஓட்டத்தை நேற்று நடத்தின. விருதுநகர் தேசபந்து மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். தேசபந்து மைதானத்தில் இருந்து மாவட்ட விளையாட்டு மைதானம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராம சுப்பிரமணியம், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட இளைஞர் அலுவலர் ஞானச்சந்திரன், வட்டாட்சியர் செந்தில்வேல் உட்பட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT