வல்லம் பேரூராட்சியை தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாநகராட்சியுடன் 15 ஊராட்சிகள் மற்றும் வல்லம் பேரூராட்சியை இணைப்பது, அதிராம்பட்டினம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் வரவேற்றார்.
தஞ்சாவூர் மாநகராட்சியுடன் வல்லம் பேரூராட்சி, கடகடப்பை, மாரியம்மன்கோவில், புதுப்பட்டினம், விளார், நாஞ்சிக்கோட்டை, இனாத்துக்கான்பட்டி, பிள்ளையார்பட்டி, நீலகிரி, ராமநாதபுரம், மேலவெளி, பள்ளியேறி, கத்திரிநத்தம், ஆலங்குடி, புலவர்நத்தம், மணக்கரம்பை ஆகிய ஊராட்சிகளை இணைப்பது தொடர்பாக பொதுமக்கள் கூறியது: வல்லம் பேரூராட்சியிலிருந்து 14 கி.மீ தொலைவில் தஞ்சாவூர் நகரம் உள்ளது. எனவே, தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது. இதை மாநகராட்சியுடன் இணைப்பதால் பொதுமக்களுக்கான வரியினங்கள் உயரும். ஆனால், மாநகராட்சிக்கான எந்த அடிப்படை வசதியும் கிடைக்கப் போவதில்லை. இதுதொடர்பாக, ஏற்கெனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மீறி இணைக்க முயன்றால், பொதுமக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும். அதற்குப் பதிலாக வல்லத்தை இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்றனர்.
இதேபோல, நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் புறவழிச்சாலை வரை உள்ள பகுதியை தவிர, அதற்கு அப்பால் உள்ள பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியிலும், பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதியிலும் உள்ளடங்கிய கத்திரிநத்தம், புலவர்நத்தம், ஆலங்குடி ஊராட்சிப் பகுதிகளை தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என அம்மாபேட்டை ஒன்றியக்குழுத் தலைவர் வலியுறுத்தினார். தொடர்ந்து, அதிராம்பட்டினம் பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு பலரும் வரவேற்று கருத்துகளை பதிவு செய்தனர். அதேநேரம், 22 வார்டுகளை உள்ளடக்கிய இப் பேரூராட்சியில் நிலப்பரப்பு குறைவாக உள்ளதால், அருகில் உள்ள ஏரிப்புறக்கரை உள்ளிட்ட சில ஊராட்சிகளை இணைத்தால், நகராட்சியில் பல திட்டங்களைக் கொண்டு வர முடியும் என தெரிவித்தனர்.
கூட்டத்தில், இறுதியாக மாவட்ட ஆட்சியர் பேசியபோது, “தற்போது முதல் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில், கருத்துகளை பதிவு செய்தவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதிகாரிகளின் கள ஆய்வுக்கு பின்னர், 2-வது கருத்துக் கேட்புக் கூட்டம் அந்தந்த பகுதியில் நடத்தப்படும்” என்றார். கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.