ஏரல் அருகே குறிப்பான்குளம் குப்பாபுரத்தைச் சேர்ந்தவர் சாலமோன்(52). இவர், வைகுண்டம் அருகே அரியநாயகபுரம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்,கடந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதிதனது மனைவி புஷ்பராணி ஜெபமங்கலத்தின் அண்ணன் மகன் திருமணத்துக்காக சோலைகுடியிருப்புக்கு வந்தார். அன்றிரவு உறவினர் தினேஷ் செல்போனில் அழைத்ததின் பேரில், சாலமோன் ஊருக்கு வெளியே வந்தார். அப்போது வேனில் வந்த 4 பேர் திடீரென அவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர்.
அவர்கள் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இருந்து வந்துள்ளதும், சாலமோனை சென்னைக்கு அழைத்துச் செல்வதும் தெரியவந்தது. வேனில் சென்னை ஆற்காடு சாலையில் நிதிநிறுவனம் நடத்தி வரும் சிவகுமார் நாயர் (45), வளசரவாக்கம் குற்றப்பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமுதா, எஸ்ஐ ரமேஷ் கண்ணன் மற்றும் பார்த்தால் அடையாளம் காட்டக் கூடிய 4 போலீஸார் இருந்துள்ளனர்.
சாலமோனிடம் உனது தம்பி தேவராஜ் ரூ.21 லட்சம் பணம் தர வேண்டும் என சிவகுமார் நாயர் கூறியுள்ளார். 24-ம் தேதி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையம் அருகே வேனை நிறுத்தி விட்டு, சாலமோனை விடுவிக்க ரூ.3 லட்சமும், வேன் வாடகை ரூ.1.50 லட்சமும் வேண்டும் என கேட்டுள்ளனர். சென்னையில் உள்ள சகோதரியின் கணவர் மூலம் போலீஸாரிடம் ரூ.4.50 லட்சம் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார்அளிக்கப்பட்டது. ஆனால் போலீஸார்நடவடிக்கை எடுக்காததால், திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் படி திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் சிவகுமார் நாயர், அமுதா, ரமேஷ் கண்ணன் மற்றும் பார்த்தால் அடையாளம் காட்டக் கூடிய 4 போலீஸார் மீது ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் திருச்செந்தூர் தாலுகா போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.