சேலத்தில் வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி 5 பேரிடம் ரூ.14.20 லட்சம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மல்லூரைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து (60). நிலம் விற்ற பணத்தை வங்கியில் முதலீடு செய்திருந்தார். நாச்சிமுத்துவுக்கு வங்கியில் இருந்து பேசுவதாக செல்போனில் அழைப்பு வந்துள்ளது. நாச்சிமுத்துவின் மகள் பேசியுள்ளார். அப்போது, வங்கியில் இருந்து பேசிய நபரிடம், தனது தந்தைக்கு முதியோர் உதவித் தொகை வரவில்லை என்று கூறியுள்ளார்.
அவரது ஏடிஎம் எண் உள்ளிட்ட விவரங்களை, கூறியுள்ளார். அடுத்த சில நொடிகளில் நாச்சிமுத்து வங்கிக் கணக்கில் இருந்து ரூ.3.96 லட்சம் மர்ம நபரால் பணம் எடுக்கப்பட்டது.
இதுபோல், சேலம் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (30) என்பவரிடம் ரூ.70 ஆயிரம், தாதகாப்பட்டியைச் சேர்ந்த பரமேஸ்வரி (41) என்பவரிடம் ரூ.7.69 லட்சம், சேலம் குகையைச் சேர்ந்த மோகன்ராஜ் (56) என்பவரிடம் ரூ.65 ஆயிரம், தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பால்வியாபாரி கணேசன் (52) என்பவரிடம் ரூ.1.20 லட்சம் என மொத்தம் ரூ.14.20 லட்சத்தை வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, அவர்களின் ஏடிஎம் கார்டு எண்கள் உள்ளிட்ட விவரங்களை பெற்று பணம் எடுத்துள்ளனா்.
இதுகுறித்த புகார்களின் பேரில் சேலம் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.