சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளநீர் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில் ஆட்சியர் கார்மேகம் தலைமையில் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழைநீர் சாலையோரத்தில் தேங்காத வகையிலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், நீர்நிலை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, வெள்ளநீர் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீரினால் ஏற்பட்டுவரும் பாதிப்புகள் குறித்தும், பாதிப்புகளை குறைப்பது குறித்தும், மழை வெள்ளத்தினால் போக்குவரத்து தடை, சாலைகள் சேதம், சாக்கடை அடைப்பு அகற்றுதல், வீடுகளில் மழை நீர் புகுதலைத் தடுத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாநகராட்சி, உள்ளாட்சித்துறை அலுவலர்களுடன் வருவாய்த் துறை அலுவலர்கள் இணைந்து செயல்பட வேண்டும். மாநகராட்சியில் உள்ள வடிகால்களை உடனுக்குடன் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மின்சார வாரிய பணியாளர்கள் மழைக்காலங்களில் மின்தடை ஏற்படும்போது 24 மணிநேரமும் விழிப்பாக இருந்து செயல்பட வேண்டும். பொதுப் பணித்துறையினர் ஏரிக் கரைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
தீயணைப்புத்துறையின் சார்பில் உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக மழையின் போது சாலைகளில் மரங்கள் சாய்ந்தால் போக்குவரத்து பாதிக்காத வகையில் உடனடியாக மரங்களை அப்புறப்படுத்த தேவையான கருவிகள் தயாராக வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு ஆட்சியர் பேசினார்.
கூட்டத்தில் சேலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி, மண்டல இயக்குநர் (நகராட்சி நிர்வாகம்) சுல்தானா, கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் பொற்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.