இந்து கணிக்கர் பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்றிதழை வழங்கிய ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர். படம்: எல்.பாலச்சந்தர் 
Regional04

15 ஆண்டுகள் போராட்டத்துக்கு பின் - கணிக்கர் மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் :

செய்திப்பிரிவு

ராமநாதபுரத்தில் வசிக்கும் இந்து கணிக்கர் பழங்குடியினர் மக்களுக்கு 15 ஆண்டுகள் போராட்டத்துக்கு பின் பழங்குடியின சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்து கணிக்கர் இன மக்கள் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ராமநாதபுரத்துக்கு 40 ஆண்டுகளுக்கு முன் இடம் பெயர்ந்தனர். இவர்கள் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஊராட்சி வ.உ.சி.நகர் சிவஞானபுரத்தில் திறந்த வெளியில் தங்கியுள்ளனர். பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த இவர்கள் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அரசின் ஆவணங்கள், சலுகைகளை பெற்றுள்ளனர். இவர்கள் 15 ஆண்டுகளாக பழங்குடியினர் இன சாதிச் சான்றிதழ் கோரி வந்தனர். ராமநாதபுரம் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அண்மையில் சாதிச் சான்றிதழ் கோரினர்.

அதனடிப்படையில் 2 மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியராக பொறுப்பேற்ற ஷேக் மன்சூர், சென்னை பல்கலைக்கழக மானுடவியல் துறையினர் கள ஆய்வு செய்ய அறிவுறுத்தினார்.

மானுடவியல் வல்லுநர் எம்.முனிராஜ் கள ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்தார். அதனடிப் படையில் ஆக.17-ல் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் கணிக்கர் இன மாணவர்கள் 25 பேருக்கு வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர் இந்து கணிக்கர் பழங் குடியினர் இன சாதிச் சான்றிதழை வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று வ.உ.சி.நகர் சிவஞானபுரத்தில் கணிக்கர் இன மாணவர்கள் மற்றும் அம்மக்கள் 45 பேருக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழை வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்.

SCROLL FOR NEXT