Regional02

சேலத்தில் 12-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் வரும் 12-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் மூலம் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் செய்தியாளர்களிடம் கூறியது:

சேலம் மாவட்டத்தில் வரும் 12-ம் தேதி மாவட்டத்தில் உள்ள 1235 வாக்குச்சாவடி மையங்கள், 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சேலம் அரசு பொது மருத்துவமனை உள்பட 1356 மையங்களில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது. இந்த பணியில் வருவாய்த்துறை, காவல்துறை, ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்பட 15 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடவுள்ளனர். அன்று ஒரு நாள் மட்டும் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி முகாமுக்கு அடுத்த இரண்டு நாட்களும் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து, அவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மெகா தடுப்பூசி முகாமில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்திட முன்னுரிமை அளிக்கப்படும். முகாமுக்கு வர முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு நடமாடும் மருத்துவ குழுவினர் மூலமாக தடுப்பூசி செலுத்தப்படும். சேலம் மாவட்டத்தில் நேற்று வரை முதல் தவணை தடுப்பூசி 48 சதவீதம் பேர் செலுத்தி உள்ளனர். இரண்டாவது தவணை தடுப்பூசி 12 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழா தமிழக அரசின் உத்தரவின் பேரில் பாதுகாப்பாக நடத்திட அனைத்து இந்து அமைப்புகளை அழைத்து பேசியுள்ளோம். ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் நிர்வாக நடுவர் நியமிக்கப்பட்டு, அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT