Regional02

சேலம் ரயில்வே கோட்டத்தில் ஆகஸ்ட் மாதம் - சரக்குப் போக்குவரத்து மூலம் ரூ.21.19 கோடி :

செய்திப்பிரிவு

சேலம் ரயில்வே கோட்டம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 476 டன் சரக்குகளை கையாண்டு ரூ.21.19 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12.86 சதவீதம் கூடுதல் வருவாயாகும்.

சேலம் ரயில்வே கோட்டத்தில் பெட்ரோலியப் பொருட்கள், சிமென்ட், இரும்புப் பொருட்கள் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்கள், வணிக சரக்குகள், மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட வேளாண் விளை பொருட்கள் உள்ளிட்டவைகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பி வைத்து வருகிறது. இதன் மூலம் சரக்குப் போக்குவரத்தில் வருவாயில் தெற்கு ரயில்வே கோட்டங்களில் முதன்மை கோட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் சேலம் ரயில்வே கோட்டத்தில் சரக்கு ரயில்கள் மூலம் 190 வேகன்கள் மூலம் 2 லட்சத்து 56 ஆயிரத்து 476 டன் சரக்குகளை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சேர்த்ததன் மூலம் ரூ.21.19 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 134 வேகன்களில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 237 டன் சரக்குகளை அனுப்பி ரூ.18.77 கோடி வருவாயை ஈட்டியிருந்தது. இதன் அடிப்படையில் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 12.86 சதவீதம் கூடுதல் வருவாயை ஈட்டியுள்ளது.

இதேபோல, பார்சல் அனுப்புவதிலும் சேலம் ரயில்வே கோட்டம் சிறப்பான சேவை மேற்கொண்டு கூடுதல் வருவாய் ஈட்டியிருக்கிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1927.40 டன் பார்சல்களை அனுப்பி, ரூ.105.81 லட்சம் வருவாய் ஈட்டியிருந்தது.

நடப்பாண்டு ஆகஸ்டில் 3365.20 டன் பார்சல்களை அனுப்பி வைத்து, ரூ.193.69 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 74.59 சதவீதம் பார்சல்களை கூடுதலாக அனுப்பியதன் மூலம் 81.48 சதவீதம் கூடுதல் வருவாயை ஈட்டியுள்ளது.

SCROLL FOR NEXT