Regional01

சேலத்தில் பேருந்தை ஜப்தி செய்ய வந்த நிலையில் - பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கிய அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் :

செய்திப்பிரிவு

சேலத்தில் விபத்து வழக்கில் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுத்த நிலையில், இழப்பீட்டுத் தொகை வழங்கியதால் ஜப்தி கைவிடப்பட்டது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கோவிந்தப்பாடியைச் சேர்ந்தவர் ஜவுளி வியாபாரி மகேந்திரன் (45). சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே கடந்த 2015-ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மகேந்திரன் மீது அரசுப் பேருந்து மோதியது. இதில் அவரின் வலது கை பலத்த காயம் ஏற்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் அவரது கை அகற்றப்பட்டது. இதுதொடர்பாக நஷ்ட ஈடு வழங்கக்கோரி மகேந்திரன் சேலம் இரண்டாவது சிறப்பு கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம், மகேந்திரனுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டார். ஆனால், இதுவரை அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்கவில்லை. இதையடுத்து, மகேந்திரன் மீண்டும் கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதி, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் வட்டியுடன் உடனடியாக ரூ.21 லட்சத்தை மகேந்திரனுக்கு வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அரசுப் பேருந்து ஒன்றை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார்.

ஆனால், நீதிமன்றம் கூறியபடி சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் இழப்பீடு வழங்கவில்லை. இதையடுத்து நேற்று (6-ம் தேதி) பாதிக்கப்பட்ட மகேந்திரன், அவரது வழக்கறிஞர் ரமேஷ் சங்கர் மற்றும் நீதிமன்ற அமீனா கார்த்தி உள்ளிட்டோர் சேலம் புதிய பேருந்து நிலையம் வந்து, அங்கு சிதம்பரம் செல்ல தயாராக இருந்த அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

இதனிடையே தகவலறிந்து வந்த அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட அதிகாரிகள், விபத்தில் பாதிக்கப்பட்ட மகேந்திரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை வழங்கினர். இதையடுத்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

SCROLL FOR NEXT